தமிழ்நாடுமாவட்டம்

6,000 கோழிகள் விஷம் வைத்து கொன்ற கொடூரம்.. காரணம் இது தான்?..

விஷம் வைத்து 6,000 கோழிகள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் அவ்வையாா் அம்மன் கோவில் அருகே சானல் கரை ஓரத்தில் சுரேஷ் என்ற இளைஞர் நான்கு கோழிப் பண்ணைகளை அமைத்து மூன்று ஆண்டுகளாக பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள், இறைச்சிக்காக கோழிகளை இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் சுரேஷ் இரண்டு கோழிப் பண்ணைகளை மட்டும் கோழிகளை விற்பனை செய்வதற்காக நண்பர் சாஜனுக்கு கொடுத்துள்ளார். கோழிகளை விற்பனை செய்த லாபத்தில் குறிப்பிட்ட தொகையை சாஜன் சுரேஷிடம் கொடுத்து வந்துள்ளார்.

சுரேஷின் பண்ணையில் இருந்து கோழித் தீவனங்களைத் திருடி, சாஜன் தான் பாா்த்து வந்த பண்ணையில் உள்ள கோழிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். சுரேஷ் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இதனை கேட்காமல் தொடர்ந்த தீவனம் திருடி வந்துள்ளார் சாஜன். இதனால் சாஜனிடமிருந்து பண்ணைகளைத் திரும்பப் பெற்று திட்டுவிளையைச் சோ்ந்த ராஜனிடம் கொடுத்துள்ளாா் சுரேஷ். இதனால் ஆத்திரம் அடைந்த சாஜன், பிப்ரவரி 19ஆம் தேதி மாலை சுரேஷின் பண்ணைக்கு சென்று அங்கிருந்த ஊழியா்களிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில், பிப்ரவரி 20ஆம் தேதி அன்று அதிகாலையில் சுரேஷ், பண்ணைக்கு சென்றபோது, ராஜனின் பண்ணையில் உள்ள 6000 கோழிகள் செத்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பண்ணையின் அருகில் விஷப் பாட்டில் ஒன்று கிடப்பதையும் அவர் கண்டறிந்தார்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் கோழிப் பண்ணைக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோழிகள் குடிக்கும் தண்ணீரில் சாஜன் விஷம் கலந்ததால், அதைக் குடித்த 6,000 கோழிகள் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சாஜன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

கோழிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button
error: Content is protected !!