புதிய கொள்கை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை.. வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டவட்டம்..

இந்தியர்களின் தனிமனித தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது உறுதி செய்யப்படும் அதே நேரம், புதிய கொள்கையும் அமல்படுத்தப்படும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பயன்பாட்டாளர்கள் தங்கள் தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்வதற்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. வாட்ஸ் ஆப்பின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய கொள்கை அமல் முடிவை மே 15-ம் தேதி வரை அந்நிறுவனம் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்தியர்களின் தனிமனித தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்றும், இரு நபர்களுக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும் என்றும், இதுகுறித்து வரும் நாட்களில் பயன்பாட்டாளர்களுக்கு விளக்கக் குறிப்பு அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்பாட்டளர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களின் மொபைல் எண், வர்த்தகம் மற்றும் விளம்பர நிறுவனங்களுடன் பகிரப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.