தமிழ்நாடு

தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வரிடம் நேரடி கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு கட்டுபாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் திரையரங்குகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோய்த்தொற்று அதிக வேகத்தில் பரவி வந்ததால் அரசு தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தியது. ஆனால் ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தியேட்டர்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்காக, தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் சங்கத்தினர் இணைந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சென்னை தலைமை செயலகத்தில் கோரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளனர். அதில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளத்தில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடும் சூழல் உள்ளது. இதனால் பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட துறையினர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேளிக்கை வரி, உள்ளூர் வரி, சொத்து வரி ரத்து போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: