உலகம்

பிரிட்டனில் தொலைதூர விண்வெளி ரேடார் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டம்!

விண்வெளியில் 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய பிரமாண்டமான புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான இலக்குகளை அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது.

டெக்சாஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய தளங்களை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது.

புதிய ரேடார் திறன், விண்வெளியை ஆபத்துகள் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைதூர விண்வெளி மேம்பட்ட ரேடார் திறன் (Deep Space Advanced Radar Capability) உருவாக்கும் திட்டம், அமெரிக்க விண்வெளி மற்றும் ஏவுகணை மையத்தால் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வாரம் கலிஃபோர்னியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் மற்றும் பிரிட்டன் ராணுவத் தளபதிகளும் பார்வையிட்ட தளங்களில் இதுவும் ஒன்றாகும். இலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸுடனும் அவர்கள் கலந்துரையாடினர்.

ரேடார்களை ஸ்காட்லாந்தில் அல்லது இன்னும் தெற்கே வைப்பது குறித்து அமெரிக்கா பிரிட்டன் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்க விண்வெளிப் படையின் லெப்டினென்ட் கர்னல் ஜாக் வாக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த தளம் கண்காணிப்பதற்காக 10 முதல் 15 பரவளைய (parabolic) ஆண்டெனாக்களையும், (பெரிய செயற்கைக்கோள் டிஷ்கள்) மற்றும் தகவல் அனுப்ப (transmit) 4 முதல் 6 ஆண்டெனாக்களையும் கொண்டிருக்கும். தளம் சுமார் 1 சதுர கிலோமிட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். மேலும் ஒவ்வொரு ரேடார் டிஷ்ஷின் விட்டமும் 15 மீட்டர் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: