இந்தியா

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு: விசாரணைக்‍குழு அமைத்தது உச்சநீதிமன்றம்..!

பஞ்சாபில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விசாரிக்‍க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி. இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணைக்‍குழு அமைக்‍கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்‍கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உரிய விசாரணை நடத்தக்‍கோரி மனிந்தர் சிங் என்ற வழக்‍கறிஞர் மனு தாக்‍கல் செய்தார். இந்த வழக்‍கு கடந்த 7-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்தது. அன்றைய தினம் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசின் வாதங்களைக்‍ கேட்ட நீதிபதிகள், முதற்கட்டமாக, பிரதமரின் பயண விபரங்களை சேகரித்து பாதுகாக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்‍கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்‍கு வந்தபோது, பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசும், பஞ்சாப் அரசும் நியமித்த விசாரணைக்‍ குழுக்‍களுக்‍கு நீதிபதிகள் தடை விதித்தனர். உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்‍ குழு அமைக்‍கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி. இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் இன்று அமைத்தது. குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: