ஆன்மீகம்

தெய்வத்திற்கும், தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை?

தன்னை வழிபடுபவர், வழிபடாதவர், கேலி செய்பவர், திட்டுபவர், குறை சொல்பவர், தன்னை வழிபாடு செய்பவர்களுக்கு துன்பம் கொடுப்பவர்கள் என எத்தகைய மனநிலை கொண்டவராக இருந்தாலும், யாருக்கும் எந்த பேதம் பார்க்காமல், இருப்பவர்கள், இல்லாதவர்கள், மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடும் காணாமல், உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான அருளை வழங்குவது தான் தெய்வமாகும்.

அதேபோல், தன்னை சரியாக பயன்படுத்துபவர்கள், வீணாக செலவழிப்பவர்கள், மாசுபடுத்துபவர்கள், தூய்மை செய்பவர்கள், வணங்குபவர்கள், வணங்காதவர்கள் என்று எந்த பேதமும் பார்க்காமல், உயிரினங்கள் அனைத்திற்கும் மட்டுமன்றி உலகின் அனைத்து பயன்பாட்டிற்கும் ஒரே மாதிரி உதவுவது தண்ணீராகும்.

இவ்வாறு, தெய்வத்திற்கும், தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமைகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்ற நிலையில், தண்ணீரின் அவசியம் குறித்தும், தெய்வத்துடன் தண்ணீரை எப்படி ஒப்பிட்டு பார்க்கலாம் என்பது குறித்து அறியலாம்.

தண்ணீரின் அவசியம்

குடிநீர், விவசாயம், தொழில் மற்றும் அனைத்து உயிரினங்களின் தேவைக்கும் தண்ணீர் மிக அவசியமாகும்.

தண்ணீரின்றி இந்த உலகம் இயங்காது. மேலும், தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது.

அதனால்தான், இன்று தண்ணீரைத்தேடி செவ்வாய் கிரகம் வரை ஆய்வு செய்து வருகிறார்கள்.

தண்ணீரில் நன்னீர், உவர்ப்பு நீர், கடல் நீர் என பல்வேறு வகைகள் இருப்பினும் தண்ணீரின் தேவை அவசியமாகும்.

மனித உடலில் உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு, பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

உடலின் அனைத்து திசுக்களுக்கும், இரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது.

உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

நம்முடைய தோலை மென்மையாகவும், மிருதுவாகவும், வைத்துக் கொள்வதற்கு உடலில் உள்ள தண்ணீரே முக்கிய காரணமாகும்.

வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும், உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணமாகும்.

பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் தான், அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது.

65 வயது மேலான முதியோருக்கு உடலில் இருக்கும் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் ஏற்படுகிறது.

நம் உடலின் மொத்த எடையில் 60 முதல் 70 சதவீதம் அளவிற்கு தண்ணீர் தான் இருக்கிறது.

இதையும் படிங்க:  மங்களம் சேர்க்கும் மகா சங்கடஹர சதுர்த்தி!

அதில், 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் தண்ணீர் இழப்பு ஏற்பட்டால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அதுவே, 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால், உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

தெய்வத்துடன் ஒப்பீடு

தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே என்று கூறுவதன் மூலமாக தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பதை விளக்குகிறார்கள்.

தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார்.

தண்ணீர் எந்த நிறத்தில் கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மனம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம், மனம், குணம் கிடையாது.

உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாகுவது போல, இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான்.

தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான்.

தண்ணீருக்கு ஏழை, பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் கிடையாது. கடவுளுக்கும் இத்தகைய பேதங்கள் எதுவும் கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.

உலகில் மிக புனிதமானதும், உயர்வானதுமான வேதம், தண்ணீரை சர்வ தேவதா ஸ்வரூபம் என்று அதாவது, அனைத்து தெய்வங்களின் வடிவம் என்று கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: