உலகம்

ஜெர்மனின் வெள்ளத்தையும், கனடாவின் வெப்பத்தின் தீவிரத்தையும் கணிக்கத் தவறிய அறிவியல்!!

ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர்.

ஆனால், அது போன்ற வானிலை சீற்றங்களின் தீவிரத்தை துல்லியமாக முன் கணிக்கும் அளவுக்கு தங்கள் கணினிகள் வலிமையானவை அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் பிரிட்டனின் முன்னாள் வானிலை மைய முதன்மை அறிவியலாளர் பேராசிரியர் டேம் ஜூலியா ஸ்லிங்கோ எச்சரித்துள்ளார்.

தீவிர வானிலைகளை உருவாக்கும் இயற்பியல் விதிகளை புரிந்துகொண்டு பருவநிலை மாதிரிகளை உருவாக்குவதில் தீவிர பாய்ச்சலை ஏற்படுத்துவதற்கு ஒரு சர்வதேச மையம் தேவை.

அதை செய்யாவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து வேகம் காட்டும் தீவிர வானிலைகளை நாம் குறைவாக மதிப்பிடுவது தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அவரும் மற்ற பிற விஞ்ஞானிகளும், பருவநிலை மாற்றம் ஒரு அவசர நிலை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், எந்த அளவுக்கான அவசரநிலையில் நாம் இருக்கிறோம் என்பதை சொல்ல முடியாது.

காரணம், அதை அளவிடுவதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் டிம் பால்மர்.

கனடாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளைப் போன்றவற்றை நாம் துல்லியமாக முன் கணிக்க வேண்டுமானால், ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சிக் கழகத்துக்கு (CERN) உள்ளதைப் போன்ற பெரிய லட்சியமும் அர்ப்பணிப்பும் தேவை என்கிறார் அவர்.

வட அமெரிக்காவோ, ஜெர்மனியோ இந்த ஆண்டு எதிர்கொண்டதைப் போன்ற வெப்ப அலைகளையும், கடும் வெள்ளத்தையும் அல்லது அது போன்ற தீவிர வானிலையையும் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திக்க வேண்டியிருக்குமா, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்படி வருமா, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையா? இல்லை ஆண்டுதோறும் வருமா? என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடவேண்டும். இந்த அளவுக்கான துல்லிய மதிப்பீடு இப்போதுள்ள நிலையில் சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: