இந்தியா

சவால்களை எதிர்கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது.. குடியரசு தலைவர் பெருமிதம்..!

தேசிய கீதம் ஒலிக்க நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

உரையில் அவர் பேசியதாவது, “கொரோனா சூழலில் நாடாளுமன்றம் கூடியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிலநடுக்கம், பெருவெள்ளம்; கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடியிருக்கிறோம். உலகிற்கே தற்போது இந்தியா முன் உதாரணமாக உள்ளது. அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது. ஒற்றுமையே நமது நாட்டின் மிகப்பெரிய பலம்.

இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. கொரோனா காலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் பலன் கொடுத்தது. கொரோனா சூழலிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. கொரோனா காலத்தில் இந்தியாவில் ஒருவர் கூட பசியால் தவிக்கவிடப்படவில்லை.

கொரோனா கவச உடை முதல் கொரோனா பரிசோதனை கருவி வரை இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் செயல்பட்டது.கொரோனா காலத்தில் இந்தியர்களுக்காக என்று இல்லாமல் உலக மக்களின் நன்மைக்காக இந்தியா பணியாற்றியது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 6 எம்.பிக்கள் உட்பட பல குடிமக்களை இழந்தோம். சுயசார்பு இந்தியா என்கிற முழக்கம் எவ்வளவு அவசியமானது என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது. நாடு முழுவதும் 1.5 கோடி ஏழை எளிய மக்கள் இலவசமாக மருத்துவ வசதிகளை பெற்று வருகின்றனர் சுயசார்பு அவசியம். நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. வேளாண்துறையை நவீனப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் பலன் அடைய முடியும். நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்குவதே மத்திய அரசின் இலக்கு. கொரோனா சூழலிலும் வேளாண் பொருட்களின் உற்பத்தி புதிய உச்சத்தை தொட்டது.

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. மத்திய அரசின் சுகாதார கொள்கைகளால் ஏழைகள் குறைந்த விலையில் மருந்துகளை பெற முடிகிறது. பிரதமரின் உழவர் நிதி உதவித்திட்டம் மூலம் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.1லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

வேளாண்துறையை நவீனமயமாக்க கடந்த காலங்களில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் 6 மாநில மக்கள் பயனடைந்துள்ளனர். சுயசார்புடன் இருப்பதே இந்தியாவின் தற்போதைய தாரக மந்திரம். வேளாண் சட்டங்களால் ரத்து செய்யப் போவதில்லை. விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி செய்யும். வேளாண் சீர்திருத்தங்களால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குடியரசுத்தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது.விவசாய சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருக்கிறது.

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. வேளாண் சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நிவாரணமாக கொடுத்துள்ளோம்” என கூறினார்.

Back to top button
error: Content is protected !!