ஆன்மீகம்

கண் திருஷ்டி அகல சொல்ல வேண்டிய மந்திரம்!

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில், தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்படுவதே திருஷ்டியாகும். இதை கண்ணேறு என்றும் சொல்லுவார்கள். அதையடுத்து, கண் திருஷ்டி எதனால் வருது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? திருஷ்டி நீங்க யாரை வழிபட நல்லது? என பார்க்கலாம்.

கண் திருஷ்டி எதனால் வருது

ஒருவருக்கு ஏதாவது நல்லது நடக்கும்போது, அதைக்கண்டு அவரது உறவினர்கள், நண்பர்கள், அருகில் இருப்பவர்கள் போன்ற ஒரு சிலருக்கு மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகும்.

இதுவே பொருமல் எனப்படுகிறது, இதனால் ஏற்படுவதே கண் திருஷ்டி ஆகும்.

இத்தகைய தீய எண்ணங்கள் கண்களின் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது.

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திருஷ்டியோ, தோஷங்களோ ஏற்பட்டுள்ளதை சில பாதிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

என்ன பாதிப்புகள்

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சண்டை சச்சரவுகள், பிரிவுகள், நஷ்டம், பொருள் இழப்பு என ஏதேனும் ஒன்று வரிசையாக வந்துகொண்டே இருக்கும்.

ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சனை பூதாகரமாக வந்து நிற்கும்.

பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, உறவினர்களுடன் பகை, காரியங்களில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மருத்துவச் செலவு, இஷ்டமானதே சமைத்திருந்தாலும் சாப்பிடப் பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது, குழப்பங்கள் போன்றவை இருந்துகொண்டே இருக்கும்.

யாரை வழிபடுவது

முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து வழிபட கண் திருஷ்டி யாவும் நீங்கும்.

பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் திருஷ்டி, தோஷங்கள் விலகும்.

பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும்.

சரபேஸ்வரரை தினமும் வணங்கி வர கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை விலகும்.

பைரவரை அஷ்டமி தோறும் வழிபட்டு வர அனைத்து கண் திருஷ்டிகளும் அகலும். எந்த ஒரு துஷ்ட சக்தியும் நம்மை நெருங்காது.

பரிகார மந்திரங்கள்

முனீஸ்வரன் மந்திரம் :

ஓம் ஹம் ஜடா மகுடதராய

உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய

சத்ரு சம்ஹாரனாய ஜடா

முனீஸ்வராய நமஹ

முனீஸ்வரனின் துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும்.

இதையும் படிங்க:  ஏழு சக்கரங்களும் அம்பாளின் தியானமும்!

சரபேஸ்வரர் மந்திரம் :

ஓம் சாலுவேசாய வித்மஹே!

பக்ஷி ராஜாய தீமஹி !

தன்னோ சரப ப்ரசோதயாத்!!

சரபேஸ்வரர் துதியை தினமும் காலையில் வெளியே செல்லும்போது 1 முறை கூறினாலே போதுமானது.

பைரவர் மந்திரம் :

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து, தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வணங்கி 8 முறை சொல்ல வேண்டும்.

பரிகாரம்

வீட்டில் மீன் தொட்டி வைத்து கருப்பு, சிகப்பு நிறங்களில் உள்ள மீன்களை அதில் வளர்க்கலாம்.

கருங்காலி மாலை அணிவதால் கண் திருஷ்டி விலகும்.

வீட்டில் வாசலுக்கு எதிராக, கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம்.

இல்லத்தில், மெல்லிய வாத்திய இசையை அல்லது மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம்.

வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா போன்ற செடிகளை வளர்க்கலாம்.

ஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரமாகும்.

வாரத்துக்கு ஒருமுறையேனும் கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாகக் கலந்து அவரவர் பிறந்த கிழமையிலோ அல்லது செவ்வாய்க்கிழமையிலோ குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் முதலானவை நீங்கும்.

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்குவதற்கு எலுமிச்சைபழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம்.

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி முதலான நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை மற்றும் அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்டி வேண்டிக்கொண்டால், திருஷ்டி, தீய சக்திகள் வெளியேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: