இந்தியா

இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்: 3 நாட்களாக அங்கேயே தவித்த பெண்

கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான ஆண் நண்பரை சந்திக்க சென்ற இளம்பெண்ணை அந்த நபர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் தேவனஹள்ளியில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஏ ரங்கநாதபுரம் கிராமத்திலுள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார் ஆதர்ஷ்.

பண்ணை வீட்டிற்கு சென்றபின் ஆதர்ஷ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார், ஆனால் அவர் அதனை நிராகரித்ததால், அவர் அந்தப் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு இரவு 7:30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து அப்பகுதி கிராம மக்களால் கண்டறியப்பட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பிறகு கிரேன் மூலம் அந்த பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். உணவின்றி, உடைந்த கையுடன் 60 அடி ஆழ கிணற்றினுள் மூன்று நாட்கள் சிக்கித்தவித்த அவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞர் ஆதர்ஷை கைது செய்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!