தமிழ்நாடு

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த டிரைவர்!

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரைப் பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பால் பிரைட். வியாபாரிகள் சங்க பிரமுகரான இவருடைய மகன் திருமணம் நேற்று முன்தினம் (ஜனவரி 27) அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. பின்னர் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், தேவாலயத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளார்.

அப்போது தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டுவிட்டார். இதையடுத்து, வீட்டில் சென்று பார்த்தபோது, தன்னுடைய நகைப்பையை ஆட்டோவில் தவறவிட்டதை உணர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பால் பிரைட், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், நகையைத் தவறவிட்ட ஆட்டோவைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே ஆட்டோ டிரைவர் சரவணகுமார், ஆட்டோவில் தவறவிட்ட நகைப்பையை எடுத்து கொண்டு குரோம்பேட்டை போலீஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்தவற்றை கூறி நகையை போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்தார்.

50 பவுன் நகையை நேர்மையாக ஒப்பட்டைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர். இவரின் செயலுக்கு அந்தப் பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!