
‘அரியர்’ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த முடிவை, மே மாதம் 3 வரை தள்ளிவைக்க, உயர் கல்வித்துறை தீர்மானித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிர பரவல் காரணமாக, பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை தவிர, மற்ற அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது.
இந்த உத்தரவால், 30 ஆண்டுகளுக்கு மேலாக, ‘அரியர்’ வைத்திருந்தவர்களும், தேர்வே எழுதாமல், தேர்ச்சி பெற்றனர். இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரியர் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு தேர்வு வைக்க வேண்டும். ஆல் பாஸ் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய நிலையில், அரியர் தேர்வை நடத்தும் முடிவை, மே மாதம் 3-ம் தேதி வரை தள்ளி வைக்க, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும், 15ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. தேர்தலை காரணம் காட்டி அரியர் தேர்வை ரத்து செய்யும் நடவடிக்கையை நியாயப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், புதிய அரசு அமைந்த பின், அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று முடிவெடுக்கலாம் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.