தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளிலும் பிப்., 1 முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்..

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வரை தமிழகம் முழுவதும் 97,176 முன் களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட மிக மிகக் குறைவு ஆகும். 37.27 சதவிகித பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாகச் சுகாதாரத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டிசம்பர் இறுதிக்குள் 1.60 கோடி பேருக்குத் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முதலில் 6 லட்சம் முன் கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 1 லட்சம் பேர்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து துறை முன் கள பணியாளார்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சுகாதாரத் துறையைத் தவிர்த்து மற்ற துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை மற்ற துறையைச் சேர்ந்த மூன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.2 லட்சம் பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். 1.2 லட்சம் பேர் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள். ஒரு லட்சம் பேர் மற்ற பிரிவுகளில் இடம் பெற்றுள்ளனர்.

மூத்த குடிமக்களுக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 12 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தடுப்பூசி போடப்படுவது பொருத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 200 தனியார் மருத்துவமனைகள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். பின்னர் மற்ற துறையைச் சேர்ந்தவர்களும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளிலும் முழுக்க முழுக்க இலவசமாகத் தடுப்பூசி போடப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!