தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை 60 ஆக உள்ள நிலையில், அதனை மீண்டும் 58 ஆக குறைப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறைகள் முடங்கின. அரசு, தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டனர். மறுபுறம் ஊரடங்கின் விளைவால் அரசுக்கு வரிவசூல் குறைந்து வருமானம் சரிந்தது. இதனை சரிசெய்யும் விதத்தில் அரசு சார்பில் சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன் விளைவாக ஓய்வூதிய பலன்களில் இருந்து அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமானது. மேலும் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களை போன்று ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்ந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

ஊரடங்கு உத்தரவால் பலர் வேலையிழந்து தவித்து வரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை இளைஞர்களின் அரசுப்பணி எனும் கனவை கலைப்பதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள், வயது அதிகரிப்பால் தற்போது வரை பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் ஓய்வு பெறும் பொழுது பண பலன்களை அளிக்க அரசிடம் போதிய நிதி இல்லாத காரணத்தால், 2 வருடங்களுக்கு பிறகு பெற்றுக் கொள்ளும் வகையில் பாண்ட் பத்திரங்களை அளிக்கலாம் என முதல்வர் ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை அரசு ஊழியர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை குறைத்தால் மீண்டும் சர்ச்சைகள் கிளம்பும் என கூறப்படுகிறது. இருப்பினும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது குறித்து முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: