தமிழ்நாடுமாவட்டம்

கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்ற கும்பல்: வெளி மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞர்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கும்பல் ஒன்றால் குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்டு ஆந்திரா மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான வினோத்குமார்.

இவர் சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாரதியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

இதனிடையே 16-ஆம் தேதி வினோத்குமார் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாக கூறி வினோத்குமாரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

பின்னர் வினோத்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் சந்தேகமடைந்த வினோத்குமாரின் தந்தை அருள்மொழி இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தனது மகனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதி போலீசார் நேற்று காலை கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு சென்று,

கடப்பா பகுதியிலுள்ள ராமாபுரத்தில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் கிடந்ததாகவும்,

விசாரணையில் அவர் வினோத்குமார் என்பதும் தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் வினோத்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரில் பார்வையிட்டு இறந்தது வினோத்குமார் தான் என உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

அதனைத் தொடர்ந்து வினோத்குமாரின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர்களை கொலை செய்யப்பட்டுள்ள இளைஞர் வினோத்குமார் தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆந்திர பொலிசாருடன் அனுப்பி வைத்தனர்.

வினோத்குமாரின் பெற்றோர்களால் அவரது சடலத்தை உறுதி செய்தால், அங்கேயே அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

குடியிருப்பில் இருந்து வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்ட இளைஞர், வெளி மாநிலத்தில் சாலையோரம் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் இரு மாநில, இரு காவல்நிலைய காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...
Back to top button
error: Content is protected !!