சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் இருவர் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில், அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன், இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த 31ம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுக பிரமுகர்களான பிரவீன் மற்றும் ஏகாம்பரம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
திமுக பிரமுகர்களின் பாலியல் அத்துமீறலால் கதறி அழுத பெண் காவலரின் நிலையை கண்டு சக போலீசார், திமுக நிர்வாகிகள் இருவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல ஜீப்பில் ஏற்றினர்.
பெண் காவலருக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமையை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், தங்கள் உடன்பிறப்புகளை போலீசார் அழைத்து செல்வதா என கோபமடைந்த எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்ட ஆரம்பித்தார்.
இதையடுத்து அழுத்தம் காரணமாக, இருவரையும் ஜீப்பில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர். இது தொடர்பாக நமது ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. திமுகவினரின் செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் பிரவீன் மற்றும் ஏகாம்பரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. அடுத்த சில நிமிடங்களிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் போலீசாரை மிரட்டிய எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா மீதும் நடவடிக்கை பாயவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.