தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இடம்பெற்ற அமைதிப்பூங்கா, அம்பேத்கர், பெரியார், காமராஜர், கருணாநிதி ஆகியோரது பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பாதியில் வெளியேறினார். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் தமிழ்நாடு வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஆளுநர் சட்டமன்றத்தின் மரபை மீறியுள்ளார் என்று ஆளும் கட்சியினரும், கூட்டணி கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டினர். அவர் வெளியேறியதும் தமிழ்நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று ஏற்கனவே வி.சி.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சின்னமலை அருகே இன்று ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் வி.சி.க.வினர் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன், ரவிக்குமார், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.