தமிழக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் மக்களுக்கு நாள்தோறும் தடையில்லா பால் விற்பனையை செய்து வருகிறது. ஆவின் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் பாலானது உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இவை சத்துகளின் அடிப்படையில் ஆரஞ்சு, நீலம், பச்சை, பழுப்பு உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டர் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆவின் வெண்ணை விலை உயர்ந்துள்ளது.
அதன்படி 500 கிராம் வெண்ணை ரூ.250ல் இருந்து ரூ. 260 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆவின் நெய் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஆவின் நிறுவன பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
