தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மற்றும் அதற்கு அடுத்தபடியாக தொடங்க உள்ளது. இதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேர்வுகள் இயக்ககம் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த பொதுத் தேர்வில் எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடத்தி முடிக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி சில நெறிமுறைகளை வகுத்துள்ளார்.
அதன்படி “பொதுத்தேர்வு நடைபெற உள்ள பள்ளி வளாகம், கழிப்பறை உள்ளிட்டவைகள் தூய்மையாக இருப்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் தேர்வறைக்குள் தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த பள்ளிகளின் வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் அந்தந்த தேர்வு மையங்களில் நின்று செல்ல வேண்டும்.
இது தொடர்பான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.” என்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
