இன்று தை அமாவாசை தினத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித தலங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்கள் நமக்கு மன மகிழ்ச்சியுடன் ஆசி வழங்குவார்கள் என்பது ஐதீகம். அதிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை திதி கொடுப்பதற்கான மிக முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது.
அந்த வகையில் தை அமாவாசையான இன்று தமிழ்நாட்டின் புனித தலங்களில் திரளான மக்கள் குவிந்து வருகின்றனர். நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக தெற்கு காசி என்றழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.