தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் கொள்முதல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரித்து வருவதாலும், கறவை மாடுகளின் வளர்ப்பு முறைகள் குறைந்து வருவதாலும் பால் தட்டுப்பாடு எழுச்சி பெற்று வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் விற்பனை விலையை அதிகரித்து வருகிறது.
இதன்படி தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் பால் விற்பனை விலையை ரூ.3 என அண்மையில் உயர்த்தியது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் நிலைகுலைந்து வரும் பொதுமக்கள் இந்த பால் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், வைக்கோல், புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டுத் தீவனங்களின் விலை உயர்ந்து வருகிறது.
இதனால் ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ.32 என கொள்முதல் செய்யும் விலை விவசாயிகளுக்கு நஷ்டத்தை விளைவிக்கிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ.42 என கொள்முதல் செய்ய தயாராக இருப்பதால் பலரும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை மறுக்கிறார்கள். எனவே பசும்பால் லிட்டருக்கு ரூ.42 எனவும், எருமை பால் ரூ.51 என்றும் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும்.
அதேபோல் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு, மாட்டு தீவன மானியம், காலதாமதமின்றி பண பட்டுவாடா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக மார்ச் 16ம் தேதிக்குள் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் மார்ச் 17ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி விடுவோம்.” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் அரசு உயர்த்தி வழங்கியது. இதனால் பால் விற்பனை விலையும் எகிறியது. இந்நிலையில் மீண்டும் பால் விலை உயருமா? என நுகர்வோர்கள் பீதியில் உள்ளனர்.
அதேபோல் மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாலும் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை கூட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Comment