பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகயை முன்னிட்டு, 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலம், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான உடற்தகுதி சான்று வழங்கும் பணி தொடங்கியது. அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெறும் இந்தப் பணியில், மாட்டின் உரிமையாளர்கள் தங்களது காளைகளுடன் வந்து ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். போட்டி நடைபெறும் அன்று மீண்டும் தகுதி சான்று பெற்ற காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளது. அதன்பின்னரே காளைகள் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேப் போன்று மேலூரில் நடைபெற்ற தகுதி சான்று பெறும் முகாமில், கருங்காலக்குடி, வஞ்சிநகரகம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 30-க்கும் மேற்றபட்ட காளைகள் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டிருந்தன. திமில் உடன் கூடிய நாட்டு மாடுகள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தபட்டன. பின்னர், முழு உடல்தகுதி பெற்ற 30 காளைகளுக்கான தகுதிச் சான்றிதழ், அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.