20230113 162943

கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா கொண்டாட்டம்!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா களைகட்டியது. கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரியத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் பொங்கலை கொண்டாடினர். பல்லாங்குழி, வழுக்கு மரம், உரியடி, தாயம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சி.கே.ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் உள்ள செஞ்சோலை மனநல காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புதுப்பானையில் புத்தரிசியிட்டு பால், வெல்லம், நெய் போன்றவை வைத்து பொங்கல் பொங்கிவர, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நடனமாடி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இளவட்ட கல் தூக்குதல், பெண்களுக்கு கோலம் போடுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவையில் உள்ள நிர்மலா கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி, அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் பொங்கல் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபட்ட மாணவிகள், குத்தாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் நகராட்சி ஊழியர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு பெரிய பானையில் பெண் ஊழியர்கள் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். நகராட்சியில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாரம்பரியமான வேட்டி சேலை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.