வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டாஸ் புயல் சென்னையில் இருந்து 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவல்துறை ஆணையர் மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னேற்பாடு பணிகளும் வேகபடுத்தப்பட்டுள்ளது. இந்த மாண்டாஸ் புயல் இன்று இரவு அல்லது அதிகாலை நேரத்தில் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது காற்று 80 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும். அத்துடன் கன மழையும் பெய்யும் அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். அவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கும் படி காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
