விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிவிப்பில், நாளை மறுதினம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் 2 ஆயிரத்து 315 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 6-ம் தேதி சுபமுகூர்த்த தினமும், 7-ம் தேதி விநாயகர்சதுர்த்தியும், 8-ம் தேதி வாரவிடுமுறை என தொடர் விடுமுறை வருவதால் ஏராளமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு ஆயிரத்து 30 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் 8-ம் தேதி கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 725 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 6 மற்றும் 7-ம் தேதிகளில் 190 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் 20 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, வரும் 8-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.