மிக்ஜம் புயல் பாதிப்பு: ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்

 

மிக்ஜம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்.

“மிக்ஜம்” புயலால் தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல் துறைகள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள்  இந்த நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து படகுகள் மற்றும் வாகனங்கள் மூலம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடுகட்ட ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி பிரதமருக்கு செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை எம்பி டிஆர் பாலு பிரதமரிடம் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில், மிக்ஜம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகனும் உடன் வருகிறார். ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு மழை மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

 
 
Exit mobile version