வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருச்சி மாநகரில் 2வது நாளாக கருமண்டபம், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான இனாம்குளத்தூர், ராம்ஜி நகர், வயலூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்துவரும் கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் கெடிலம், மடப்பட்டு, சேந்தநாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதன்காரணமாக, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மிகுந்த சத்தத்துடன் ஆலங்கட்டி மழை பெய்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு அரியலூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், புதுச்சேரியில் மன்னாடிபட்டு, கூனிசம்பட்டு, லிங்காரெட்டி பாளையம், திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும், புதுச்சேரியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நகர மற்றும் கிராம பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக, வாகன ஓட்டிகள் சீரமத்திர்க்குள்ளாகினர்.
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
