இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது மக்களுக்கு பிடித்தமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 1231 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இந்த தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 470 ஏக்கர் பரப்பில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைகிறது.
புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.