தமிழகத்தில் வேலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 168 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு 14 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வயது வரம்பு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் இதில் SC /ST பிரிவினர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விருப்பமுடையவர்கள் அந்தந்த மாவட்ட இணையதளம் வாயிலாக நவம்பர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக நவம்பர் 30ம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது வேலூர் மாவட்ட ரேஷன் கடைகள் உள்ள 135 விற்பனையாளர் மற்றும் 33 கட்டுநர்கள் என மொத்தமுள்ள 168 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வரும் 14ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்த நேர்முகத் தேர்வானது அடுக்கம் பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் டிச.14 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் அரசால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.