மத்திய அரசு ஊழியர்கள் 4% உயர்வு பெற்று தற்போது 38% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 34% இருந்து 38% அகவிலைப்படி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அகவிலைப்படி உயர்வின்படி ரூ.37,800 சம்பளமாக பெறும் அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு ரூ.14,364 வரை அகவிலைப்படி பெறுவார்கள் என உத்தேசமாக கணக்கிடப்படுகிறது. மேலும் ரூ.60700 சம்பளமாக பெறும் ஒரு ஊழியர் ரூ.23066 அகவிலைப்படியை பெறுவார்.
- Advertisement -
இதே போல் அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் ரூ.1,16,200 மாத சம்பளம் பெற்றால் 38% அகவிலைப்படி கணக்கீடு செய்தால் ரூ.44,156 வரை அகவிலைப்படி பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2359 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படக்கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.