ttf vasan

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடிபர் டிடிஎப் வாசன்

கடலூரில் திரைப்பட இயக்‍குநரின் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த பிரபல யூ-டியூபர் டிடிஎஃப் வாசனை காண திரண்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் செந்தில் செல்லம் என்ற திரைப்பட இயக்‍குநரின் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. அடிக்‍கடி விதிமுறைகளை மீறி இருசக்‍கர வாகனத்தில் அதிவேமாகச் சென்று சர்ச்சையில் சிக்‍கும் பிரபல யூ-டியூபர் டிடிஎஃப் வாசன், இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவரைக்‍ காண, ஆயிரக்கணக்‍கான இளைஞர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்‍கு இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தொடர்ந்து, காரில் டிடிஎஃப் வாசன் புறப்பட்டபோது, அவரை இருசக்‍கர வாகனத்தில் பின்தொடர்ந்த இளைஞர்களால், விபத்து ஏற்பட்டு பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் குவிந்த இளைஞர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி, போலீசார் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து டிடிஎஃப் வாசன், கடலூரை சேர்ந்த விக்னேஷ், செந்தில் உள்பட 300 நபர்கள் மீது பொதுமக்களுக்‍கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர். செல்லும் இடமெல்லாம் பொது அமைதியை சீர்குலைக்‍கும் வகையில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.