தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
கோவை சிட்கோ பகுதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். பொய்யான தகவல் மற்றும் போலியான வீடியோவைக் கண்டு அச்சமடைய தேவையில்லை என அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினர். மேலும் தவறான வீடியோவை பரப்புவர்களை கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சேலம் ஜான்சன்பேட்டை அருகே உள்ள திடீர் நகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் உதவி ஆணையர் மாடசாமி சந்தித்து பேசினர். அப்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், உங்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக வடமாநில தொழிலாளர்களுக்கு ஆட்சியர் கார்மேகம் இனிப்புகளை ஊட்டி விட்டு உற்சாகமாக கொண்டாடினார். பதிலுக்கு வடமாநில தொழிலாளர்களும் ஆட்சியருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
Leave a Comment