தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இத்திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்த உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு தேர்வு பணிகள் நிறைவு பெற்றது.
அவ்வகையில் இத்திட்டத்தின் துவக்க விழா காஞ்சிபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகைக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், செல்வப் பெருந்தகை, வரலட்சுமி மதுசூதனன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
