மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அனல் பறக்கும்.
இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் ஆயிரம் காளைகள் மற்றும் 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சரியாக காலை 8 மணிக்கு போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயற்சித்து வருகின்றனர்.
காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதனிடையே போட்டி தொடங்குவதற்கு முன் காளை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். போட்டிக்காக காளைகள் அழைத்து வரும் போது காளைமுட்டியதில் உரிமையாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்தி வந்த வீரர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
