தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் விதமாக அரசு விளையாட்டு துறை சார்பாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று ‘முதல்வர் கோப்பை’ விளையாட்டு போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சட்டசபையில் அறிவித்த படி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்க இன்று ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் வாலிபால், பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, ஜிம் உள்ளிட்டவைகள் போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளது.
