அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு

 

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளை உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அதன்படி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து, நீதிபதிகள் சாதி பெயரை சொல்லி காளைகளை அவிழ்க்க கூடாது என்ற நீதிமன்ர உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்த மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

 
 
 
Exit mobile version