தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 24ம் தேதி முதல் 2023 ஜன.1ம் தேதி முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை இன்னும் 2 நாட்களில் முடியவுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பள்ளிகள் திறப்பை கருத்தில் கொண்டு மீண்டும் தங்களின் வசிப்பிடத்திற்கு வர தொடங்கியுள்ளனர். இதனை முன்னிட்டு பயணிகளின் தேவையை கருதி தமிழக போக்குவரத்துத்துறை 600 சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
வரும் ஜன. 1ம் தேதி வரை மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் இச்சிறப்பு பேருந்துகளில் பயணிக்க மக்கள் www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும் tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.