கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் பயங்கர சாலை விபத்து நடந்தது. மேட்டத்தூர் கிராமத்தில் சுற்றுலா வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுற்றுலா வாகனத்தில் இருந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.
வாகன ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தை அடுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அப்புறப்படுத்தினர்.