தமிழக சட்டப்பேரவையில் நடப்பு (2023-24) நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அட்டகாசமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். இதன்படி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.
இலங்கை தமிழர்களுக்கு 7000 புதிய வீடுகள்
அதில் அவர் தஞ்சாவூரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும். இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் கோரிக்கை நிறைவேற்றும் வகையில், மறு வாழ்வு முகாம்களில் 7000 புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்றார்.
மதுரை நூலகத்தில் 3,50,000 புத்தகங்கள்
மதுரையில் 2 லட்சம் சதுர அடியில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை கவரும் வகையிலும், போட்டி தேர்வர்களை தயார்ப்படுத்தும் வகையிலும், கலையரங்கத்துடன் பிரம்மாண்டமான நூலகம் அமைகிறது. முதற்கட்டமாக இங்கு 3,50,000 புத்தகங்கள் இடம் பெறும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவித்தொகை
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு முதல் நிலை தேர்வுகளுக்கு தயாராக மாதம் ரூ.7,500, முதன்மை தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம்
சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும். சென்னை இந்தியாவின் விளையாட்டு நகரமாக மாற்றப்படும். இதேபோல் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு
மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆகவும், அதிகம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி, வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி திட்டத்திற்கு ரூ.50 கோடி, தமிழக உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி, 25 தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலைக்கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும். இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.305 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.305 கோடி மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.1580 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ. 30,000 கோடி கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
