இந்தியாதமிழ்நாடு

“தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசி தேவை”.. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்..!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் இருந்து கொரோனாவை விரட்ட தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 9 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி மருந்து கையிருப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 20 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மத்திய சுகாதாரத்துறை கூடுதல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 864 அரசு தடுப்பூசி மையங்களிலும், 931 தனியார் தடுப்பூசி போடும் மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 12-ந்தேதி நிலவரப்படி 39 லட்சத்து 44 ஆயிரத்து 5 பயனாளிகளுக்கு ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்துக்கு 47 லட்சத்து 3 ஆயிரத்து 590 ‘டோஸ்’ ‘கோவிஷீல்டு’, 7 லட்சத்து 82 ஆயிரத்து 130 ‘கோவேக்சின்’ என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரத்து 720 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

தினமும் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்த மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மண்டல தடுப்பூசி பாதுகாப்பு மையங்களுக்கும், மாவட்ட தடுப்பூசி பாதுகாப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மாநில தடுப்பூசி பாதுகாப்பு மையங்களில் எந்த மருந்தும் கையிருப்பு இல்லை. கடந்த 3 நாட்களில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சராசரியாக 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தடுப்பூசி திருவிழாவும், பணியிடங்களில் தடுப்பூசி போடும பணியும் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி மருந்துகள் 5 முதல் 6 நாட்களுக்கு மட்டுமே போடும் நிலையில் உள்ளது.

எனவே எதிர்வரும் 10 நாட்களுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் இன்றி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் வகையில் 15 லட்சம் ‘டோஸ்’ ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 5 லட்சம் ‘டோஸ்’ ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 20 லட்சம் ‘டோஸ்’ தடுப்பு மருந்தை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

25–ந்தேதிக்குள் தடுப்பூசி போட நடவடிக்கை

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேரே கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். பொது சுகாதாரத்துறை கணக்கெடுப்பின்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் அனைத்தும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்கள் வரும் 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  டேஸ்டியான “பால் கொழுக்கட்டை” ரெசிபி.. வீட்டில் செய்து அசத்துங்க..!

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: