தமிழ்நாடுமாவட்டம்

நாளை முதல் மீண்டும் அமலுக்‍கு வரும் கொரோனா கட்டுபாடுகள்.. தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்‍கு வருகின்றன. அதன்படி, மாவட்ட வணிக வளாகங்களில் சில்லறை விற்பனை கடைகளுக்‍கு அனுமதியில்லை என்றும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த பல்வேறு செயல்பாடுகளுக்‍கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி,

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிப்பு – அதேபோல், மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்‍கு தடை விதிக்‍கப்படுகிறது.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.

முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரம் மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும், பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

காய்கறி கடைகள், பல சரக்‍கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்‍கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.

உணவகங்கள் மற்றும் தேநீர்‍ கடைகளில் உள்ள மொத்த இருக்‍கைகளில் 50 சதவீத இருக்‍கைகளில் மட்டுமே வாடிக்‍கையாளர்களை அனுமதிக்‍க வேண்டும். இரவு 11 மணி வரை உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்தவும், பார்சல் சேவைக்‍கும் அனுமதி.

கேளிக்‍கை விடுதிகள் 50 சதவீத வாடிக்‍கையாளர்களுடன் செயல்படலாம். பொழுதுபோக்‍கு பூங்காக்‍கள், பெரிய அரங்கங்கள், உயிரியல் பூங்காக்‍கள், அருங்காட்சியகங்கள் போன்ற மக்‍கள் கூடும் இடங்கள் 50 சதவீத வாடிக்‍கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்‍கைகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பட வேண்டும்.

உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் வரை பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்‍கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்‍களுக்‍கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: