
மேட்டுப்பாளையம் யானை புத்துணர்வு முகாமில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலை சேர்ந்த, ‘ஜெயமால்யதா’ என்ற யானையை பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத் இருவரும் அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலானது.
வீடியோ வெளியான சில மணிநேரங்களில் வினில்குமாரை இந்து அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்தது. மேலும், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா விசாரணை நடத்தினர். இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாகன்கள் கூறுகையில், ‘யானையை நாங்கள் குழந்தைபோல் பாதுகாத்து வருகிறோம். குளிக்கச் சென்ற இடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக ஓடியது. இதனால் அச்சமடைந்த நாங்கள், முகாமில் ஏதாவது விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று, அதை பிடிக்க அரை மணி நேரம் முயற்சியில் ஈடுபட்டோம். பாகன் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக, அதை அடித்தோம் என விளக்கம் அளித்தனர்.