தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!!

தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைகளை துவங்க கல்லூரி கல்வி இயக்ககம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் முடிந்துள்ள நிலையில் புதிய கல்வியாண்டு துவங்க உள்ளது. இந்த புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியாக இருப்பதால், மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமடைந்துள்ளது.

இதற்கிடையில் பல தனியார் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறாததால் மாணவர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க கல்லூரி கல்வி இயக்ககம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள மொத்தம் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள், படிப்புகள் போன்ற தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் மாணவர் ஒருவர், ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சில வசதிகள் இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதும் ஆகஸ்ட் 1 முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் அளித்துள்ளது. கடந்த கல்வியாண்டை பொருத்தளவு 89 ஆயிரம் இடங்களுக்கு மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: