இந்தியா

ஆக்சிஜன் ரயிலை இயக்கும் ஸ்ரீஷா கஜினி.. பிரதமர் மோடி பாராட்டு..!

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பக்க பலமாக இருக்கிற பலருடன் கலந்துரையாடினார்.

அந்த வகையில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை முழுக்க முழுக்க பெண்களே இயக்குவதாக அவர் தெரிவித்தார்.

அந்த ரெயிலின் டிரைவரான ஸ்ரீஷா கஜினியுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

“நீங்கள் ரெயில் டிரைவராக பணியாற்றுவதாக கேள்விப்பட்டேன். முழுமையாக பெண்களைக் கொண்ட குழுதான் இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குவதாக என்னிடம் சொன்னார்கள். கொரோனா காலத்தில் உங்களைப்போன்ற பல பெண்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டுக்கு வலிமை சேர்க்க முன்வந்திருக்கிறீர்கள். நீங்கள் பெண் சக்திக்கு மிகப்பெரிய உதாரணம். நாடு உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறது” என பிரதமர் மோடி கூறினார்.

இந்தப் பணியை செய்வதற்கான உந்துதல் எப்படி கிடைத்தது என அவரிடம் பிரதமர் மோடி கேள்வியும் எழுப்பினார்.

அதற்கு ஸ்ரீஷா கஜினி, “ எனக்கு இதற்கான உந்துதலாக அமைந்தவர்கள், எனது அப்பாவும், அம்மாவும்தான். என் அப்பா ஒரு அரசு ஊழியர். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் 3 பெண் பிள்ளைகள். எனக்கு 2 மூத்த சகோதரிகள். நாங்கள் வேலை செய்வதற்கு அப்பாதான் எங்களுக்கு ஊக்குவித்தார். என் மூத்த அக்கா வங்கியில் வேலை பார்க்கிறார். நான் ரெயில்வேக்கு வந்து விட்டேன்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பிரதமர் மோடியுடன் பேசும்போது, “ நான் இந்த வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் கவனமாகவும், பாதுகாப்பாகவும், முறைப்படியும் வேலை செய்கிறேன். ரெயில்வே எனக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க எனக்கு பசுமைவழித்தடம் ஒதுக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் 125 கி.மீ. போய் விடுவேன். ரெயில்வே இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றது. நானும் அந்தப் பொறுப்பை ஏற்று இருக்கிறேன்” என குறிப்பிட்டார்.

அந்தப் பெண்ணை மனதார பாராட்டிய பிரதமர் மோடி, 3 பெண் பிள்ளைகளுக்கு உத்வேகம் அளித்த அவரது தந்தைக்கும், தாய்க்கும் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: