சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள் எடுத்த உலகின் நான்காவது கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆனார். வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் எடுத்த உடனேயே கோலி இந்த எண்ணிக்கையை எட்டினார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தப் பட்டியலில் அவரை முந்தியுள்ளனர்.
கான்பூர் டெஸ்டில் பேட்டிங் செய்வதற்கு முன், கோலி 593 இன்னிங்ஸ்களில் 26,965 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய கோலி:
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். 2007ல் சச்சின் தனது 623வது இன்னிங்சில் 27 ஆயிரம் ரன்களை கடந்தார். இருப்பினும், கோலி இந்த வரலாற்று சாதனையை அடைய அவரை விட 29 இன்னிங்ஸ் குறைவாக விளையாடினார். மறுபுறம், சங்கக்காரா 648 இன்னிங்ஸ்களில் விளையாடி 27,000 ரன்களை எட்டினார், அதே நேரத்தில் பாண்டிங் தனது 650வது இன்னிங்ஸில் அதிக ரன்களை பூர்த்தி செய்தார்.
அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன்கள்:
விராட் கோலி – 594 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் – 623 இன்னிங்ஸ்
குமார் சங்கக்காரா – 648 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் – 650 இன்னிங்ஸ்