ஆன்மீகம்

கருட பஞ்சமியின் சிறப்பு பலன்கள்!

திருமாலும், கருடனும் ஒருவரே என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீதசக்தி, தேஜஸ் என்ற குணங்களுடன் திகழ்கிற கருடன், திருமாலைப் போன்று எட்டுவிதமான சித்திகளைக் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றி பாடப்பட்டிருக்கிறது. அதையடுத்து, கருட பஞ்சமி எப்போது கொண்டாடப்படுகிறது, கருடனின் சிறப்பு, எப்படி விரதமிருப்பது, எங்கே விஷேசம், என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

கருட பஞ்சமி விளக்கம்

கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளே கருட பஞ்சமியாக கருதப்படுகிறது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகின்றது.

கருட பஞ்சமியன்று பெருமாள் மற்றும் கருடனை விரதம் இருந்து வழிபட சகல பாவ, தோஷங்கள் நீங்கி சுப யோகம் கிடைக்கிறது.

கருடனுக்கு வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் உண்டு.

கருடனின் சிறப்பு

கருட புராணத்தின் படி கத்ரு எனப்படும் நாகங்களின் தாய்க்கும், கருட பகவானின் தாயான வினிதைக்கும் ஏற்பட்ட சவாலில், வினிதை தோற்றதால், கத்ருவின் அடிமையாக வினிதை வேலை செய்து வந்தாள்.

அதையடுத்து, தனது தாயை விடுவிக்கும்படி கத்ருவிடம், கருடன் கேட்டபோது, தேவலோகத்தில் இந்திரனிடம் இருக்கும் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கொடுத்தால் விடுவிப்பதாக கூறினார்.

அதன்படி, தேவலோகம் சென்று இந்திரனிடமிருந்த அந்த அமிர்த கலசத்தை வாங்கி வந்து, கத்ருவிடம் கொடுக்க கருடனின் தாயான வினிதையை அவள் விடுதலை செய்தாள்.

இந்நிலையில், கருடனின் பராக்கிரமத்தை கண்டு வியந்த மகாவிஷ்ணு உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கருடனிடம் கேட்க, அதற்கு கருட பகவான், மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று கூற, அவ்வாறே மகாவிஷ்ணுவும் வரம் தந்தருளினார். அன்றிலிருந்து திருமாலின் வாகனமாக கருடபகவான் வலம் வருகிறார்.

கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகம், பந்தளத்தில் இருந்து சுவாமி ஐயப்பனின் நகை ஆபரண பெட்டிகள், சபரிமலை கோயிலுக்கு செல்லும்போது வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.

விரதமுறை

கருட பஞ்சமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல், பொன், வெள்ளி, தாமிரம் போன்றவைகளால் செய்யப்பட்ட பாம்பு வடிவத்தை அரிசியின் மேல் வைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  விநாயகரிடம் இப்படி வரம் கேட்க வேண்டும்!

மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை, பாம்பின் அருகில் வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும்.

இவ்வாறு பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களை பெறுவதுடன், நாக தோஷம் நீங்கும்.

எங்கே விஷேசம்

கருட பஞ்சமி அன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பான வழிபாடு நடைபெறும்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் என்னும் ஊரில் இருக்கும் கல் கருடன் மிக விஷேசமாகும்.

கருட மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸீபர்ண பக்ஷாய தீமஹீ

தந்நோ கருட ப்ரசோதயாத்

பறவைகளின் ராஜாவான கருடனே, திருமாலின் வாகனமாக இருப்பவரே உம்மை வணங்குகிறோம். எங்களை தீய சக்திகளில் இருந்து காப்பாற்று என்பதே இதன் அர்த்தமாகும்.

பலன்கள்

வானில் மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும்.

ராகு, கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும்.

பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருப்பதால் அவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். திருமணமாகாத கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும்.

குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

மனகுழப்பம், மனசஞ்சலம், தரித்திரம் நீங்கும்.

மாதந்தோறும் வருகிற வளர்பிறை பஞ்சமி திதி நாளில், கருடாழ்வாரை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

கருடனை எந்த நாளில் வணங்க, என்ன பலன்கள்

ஞாயிறு : நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

திங்கள் : குடும்ப நலம் கூடும்.

செவ்வாய் : தைரியம் ஏற்படும்.

புதன் : எதிரிகள் விலகுவர்.

வியாழன் : நீண்ட ஆயுள் கிடைக்கும்.

வெள்ளி : அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும்.

சனி : முக்தி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: