ஆன்மீகம்

தந்தையை மிஞ்சிய மைந்தன்..!

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று கொட்டாரக்கரா கணபதி கோயில். அடிப்படையில் கொட்டாரக்கரா கணபதி கோயில், சிவன் கோயிலாகும்.

பலாமரத்திலான திருமேனி கொண்ட கணபதி, கையில் அப்பம் ஒன்று வைத்திருக்கிறார். முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் கொழுக்கட்டைப் பிரியரான கணபதி இங்கு நெய்யப்பப் பிரியராக இருக்கிறார்.

அரச குலத்தவர்கள் பலரையும் அழித்ததால் ஏற்பட்டப் பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவபெருமான் கோவில்களை நிறுவினார். அந்தக் கோவில்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று.

கேரளாவின் புகழ்பெற்ற சிற்பியான பெருந்தச்சன் கொட்டாரக்கரா சிவனை வழிபட்ட பின்பு, அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். அந்தப் பலா மரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் கணபதி திருமேனி ஒன்றைச் செய்தார்.

கொட்டாரக்கராவில் இருக்கும் சிவன் கோவிலில், அந்தத் திருமேனியை நிறுவ நினைத்த அவருக்கு,அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், சிவன் கோவில் வளாகத்தில் கணபதியின் திருமேனி நிறுவப்பட்டது. இதையடுத்து சிவன் கோயிலின் அக்னி மூலையில் கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாளடைவில் அந்த சிவன் கோயில் கணபதியால் புகழ் பெறத் தொடங்கியது. பின்னர் சிவன் கோயில் என்ற பெயர் மாறி கொட்டாரக்கரா கணபதி கோயில் என மாறிவிட்டது.

கொட்டாரக்கரா பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒருவர், மகாகணபதியை வழிபடும் பக்தராக இருந்தார். அவரது மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தனது மகளின் திருமண நாளில் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்த விரும்பிய அவர், வடக்கு மலபார் பகுதியில் புகழ் பெற்றிருந்த ஒரு களியாட்டக் குழுவினரை அழைத்து வந்து ‘கிருஷ்ணன் களியாட்டம்’ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார்.

மன்னர் அந்தக் குழுவினரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் அந்தக் குழுவினர், வர இயலாது என்று சொல்லி மறுத்து விட்டனர்.

இதனால் வருத்தமுற்ற மன்னர், கொட்டாரக்கரா மகாகணபதியிடம் இது குறித்து முறையிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய விநாயகர், அவரை ‘ராமாயண காவியம்’ ஒன்றை எழுதச் சொன்னார். மன்னரும் ராமாயணத்தை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து எழுதி முடித்தார். அதற்கு ‘ராமனாட்டம்’ என்று பெயரிட்டு, அதை மகாகணபதி கோவிலில் வைத்து வழிபட்டார்.

அன்றிரவு மன்னருக்கு மீண்டும் ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவில், மகுடம், பச்சை, தாடி, மினுக்கு, கத்தி, கதை முதலிய பல உருவங்கள் தோன்றின. மன்னர் அந்த உருவங்கள் அனைத்தையும் கொண்டு, புதியதாக ஒரு களியாட்டத்தைத் தொடங்கினார். அந்தக் களியாட்டத்திற்குக் ‘கதகளியாட்டம்’ என்று பெயர் ஏற்பட்டது. மகாகணபதியின் அருளால்தான் இந்தக் ‘கதகளியாட்டம்’ என்ற அரியதொரு நடனக்கலை தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது, இக்கோவிலுக்கு வந்து மகாகணபதிக்கு நெய்யப்ப வழிபாடு செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு,அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: