ஆரோக்கியம்

காற்று மாசு குறித்து தெரியாத சில விஷயங்கள்!

சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட காற்று மாசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. நமது நாட்டிலும் டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்கள் காற்று மாசினை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதைக் கண்டு வருகிறோம். மனிதர்களின் எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் வேகமாக பெருகி வரும் வாகனங்கள்தான் காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வளர்ச்சிக்காக காற்றைப் பெருமளவு மாசுபடுத்துகிறோம்.

எதனால் ஏற்படுகிறது

காற்று மாசு பொதுவாக புகை, தூசு, துகள், சாம்பல், நச்சுவாயு போன்றவைகளால் ஏற்படுகிறது. வாகனங்கள் உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றாலும் நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை எரியூட்டும்போதும் காற்று மாசடைகிறது. வாகனப் புகையினால் ஏற்படும் மாசு இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதிலிருந்து காரீயம், கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், சல்பர்டைஆக்சைடு மற்றும் துகள்கள் வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிப்படைகிறது.

இவை தவிர, இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக, விறகு மற்றும் உயிரி பொருள் எரிப்பு, எரி பொருள் கலப்படம் ஆகியவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மரம், வேளாண் கழிவுகள் மற்றும் உயிரி எரிப்பு பொருட்கள் மூலம் 165 மில்லியன் டன்கள் எரிபொருள் வெளியீடுகளில் உட்புற மற்றும் வெளிப்புற காற்றில் கலக்கின்றன.

பாதிப்புகள்

வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்டைஆக்சைடு, பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாசுகள் பூமியின் மேலுள்ள வளிமண்டலத்தில் ஓர் திரைபோல் படிந்துவிடுகின்றன. இதனால், பூமியின் மேல்பட்டுத் திரும்பும் சூரியனின் அகச்சிவப்புக் கதிர்களைத் திரைபோல் படிந்துள்ள மாசுத்திட்டுகள் தடுத்து விடுகின்றன. அவை மீண்டும் பூமிக்கே திரும்புவதால் பூமியினுடைய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்பம் கூடுவதால், துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன.

வாகனப்புகையினால் ஏற்படும் பாதிப்புகளினால் மார்புச்சளி, மூச்சுத் திணறல், பல் ஈறு வீக்கம், நுரையீரல் புற்றுநோய், கண் எரிச்சல் உண்டாகின்றன. ஹைட்ரோ கார்பன் அதிக அளவு வெளியிடப்படுவதால் மூச்சுக்குழாய் அடைப்பு, இருமல், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், புற்றுநோய் மற்றும் உடல் சோர்வுகள் வருகின்றன. காரீயம் நம் உடலில் அதிக அளவில் சேரும்போது நினைவாற்றல் குறைகிறது. சிந்தனையில் மாற்றம், சிறுநீரகத்தில் பழுது, அமைதியின்மை மற்றும் நுரையீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

விவசாயமும் பாதிப்பு

இது மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இந்த நச்சுகள் காற்றில் அதிகமாக கலப்பதால் தாவர இலைகளின் வளர்ச்சி குன்றுகிறது. இலை சுருளுதல், காய்கள் முற்றாமலேயே பழுத்துவிடுதல் போன்ற அபாயம் நேரிடுகின்றன. வாகனப்புகையிலிருந்து வெளியேறும் துகள்கள் மண்ணில் படிவதால், அந்த நிலங்கள், பயிர்கள் மற்றும் செடிகள் வளர்வதற்குத் தகுதியற்றுப் போகின்றன. மேலும், தாவர இலைகளின் மீது துகள்கள் படிவதால் உணவு உற்பத்தி அதிக அளவு குறைந்து போகிறது.

இதையும் படிங்க:  சிறுநீர் பாதை தொற்றுகளை சரி செய்யும் பழம்?

தீர்வு

காற்று மாசில் இருந்து தப்பிக்க கார்கள், மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தலாம்.

மிகவும் பழமையான வாகனங்களை மாற்ற வேண்டும்.

காற்று மாசினை குறைப்பதற்காக சைக்கிள்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

பேட்டரி வாகனங்கள், எலக்ட்ரானிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

வாகனங்களுக்குத் தூய்மையான, தரமான எரி பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

காரீயம் கலக்காத எரிபொருளை பயன்படுத்துவது மிகவும் நன்மையளிக்கும்.

சாலைகளை மேம்படுத்தி முறையாகப் பராமரிப்பதாலும் மாசுக்களை கட்டுப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: