மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் புதல்வியாகக் கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை இராமர் நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.
இராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் இலட்சுமணனும் சென்றனர். அப்போது இலங்கை அரசனான இராவணன் சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் இராமர் வானரங்களின் துணையுடன் இராவணனை வென்று சீதையை மீட்டார்.
வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை வால்மீகியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு லவன் மற்றும் குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இரு மகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.
சீதா தேவி தோன்றிய நாளான பங்குனி நவமி ஆகும் . அன்றே , \”சீதா ஜெயந்தி\” என்றும் \”சீதா நவமி\” என்றும் பக்தர்கள் கொண்டாடிவருகின்றனர். பூமா தேவியின் பொறுமை அன்னையிடம் திகழ்வதால் பூமி மாதாவையும் அந்த தினத்தில் போற்றி புகழ்கின்றனர். வட மாநிலங்களான பீகார், அயோத்தியா, ஆந்திராவில் இத்திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஒரு பெண் தன கனவரின் இன்பத்திலும்,துன்பத்திலும்,விட்டுகொடுக்காமல் ,ஒன்றாக இணைந்து வாழ்வதன் நோக்கமே இந்த விரதமாகும்.
இந்நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான , ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால் , இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணம் தள்ளிப்போகும் கன்னிப்பெண்களும் இவ்விரதத்தை மேற்கொண்டால், ராமபிரானைப் போல அழகும் பண்பும் நிறைந்த கணவன் கிடைப்பான்.
விடியற்காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் பூஜையறையை சுத்தம் செய்யவேண்டும். ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் சேர்ந்து இருக்கும் படத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்கள் சூட்டி ஒரு சிறிய பலகை மீது வைக்க வேண்டும். விளக்கை ஏற்றி, சீதா சஹஸ்ரநாமத்தை கூறி மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அன்னைக்குப் பிரசாதமாக பழம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபடலாம். பின்பு சீதா தேவியின் வாழ்க்கைக் கதையை பக்தியோடு படிக்க அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
அன்று அருகில் இருக்கும் ராமர் ஆலயத்திற்குச் சென்று ராமபெருமானையும், சீதா தேவியையும் தரிசித்து மகா அபிஷேகம், ஆரத்தி ஆகியவற்றைக் காணலாம். வீட்டில் ராமாயணம் படிக்க இயலாதவர்கள், கோயில்களில் நடக்கும் கதாகாலட்சேபத்தை கேட்கலாம்.
விரத நாள் அன்று, அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், அமைதி,சந்தோஷம், தாய்மை உணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னை அருள்வாள். மற்றும் கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன், சீரும் சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அன்னை அருள்புரிவாள் என்பது நம்பிக்கை.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh