
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் கூலித் தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. காமராஜர் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.